வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண மனித சங்கிலி போராட்டம் எதிர்ப்பு குழு கூட்டமைப்பு முடிவு
போத்தனூர் : கோவை, புதியதாக உருவாக்கப்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு, கூட்டமைப்பு சார்பில் வரும், 6ல் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவானது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தினமும் சேகரிக்கப்படும் அனைத்துவித குப்பைகழிவு, போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையில், ஸ்ரீராம் நகரை ஒட்டியுள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையின் ஒரு பகுதியில் கொட்டப்படுகிறது.இதனால் கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த இயலாத நிலைக்கு மாறிவிட்டது.பலவித தொற்றுநோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். துர்நாற்றத்தால் தினமும் அவதிப்படுகின்றனர். பலவித போராட்டங்கள் நடத்தியும், வழக்கு தொடர்ந்தும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 'வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு' எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் ஆலோசனை கூட்டம், ஈச்சனாரி சாலை பிரிவுக்கு எதிரேயுள்ள, தனியார் கட்டடத்தில் நேற்று நடந்தது.ஸ்ரீராம் நகர், அன்பு நகர், கோணவாய்க்கால்பாளையம், மகாலிங்கபுரம், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற இக்கூட்டத்தில், குப்பை கிடங்கை அகற்றக் கோரி, வரும் 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு மனித சங்கிலி போராட்டத்தை, பைபாஸ் சாலை பாலம் துவங்கி, வெள்ளலூர் வரை நடத்துவது, விரிவாக விளம்பரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.பேரணி, உண்ணாவிரதம், குப்பை வாகனம் சிறைபிடிப்பு நடத்தவும் முடிவெடுத்தனர். குறிப்பாக, பெண்களை அதிகளவில் பங்கேற்க செய்ய தீர்மானிக்கப்பட்டது.