ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் துவங்கியது! ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருகை
கோவை; ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம், கோவையில் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க, பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்திருக்கின்றனர்.இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம், கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது; 10ம் தேதி வரை நடக்கிறது. 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் வாயிலாக நிரப்பப்படுகின்றன. நேற்று காலை, 5:00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் தெலுங்கானா, குஜராத், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.கயிறு ஏறுதல், ஓட்டப்போட்டிகள், உயரம் தாண்டுதல் போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து இளைஞர்களின் எடை, உயரம் அளவீடு செய்யப்பட்டன. இன்று (நவ., 5) ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களும், நாளை (நவ., 6) ராஜஸ்தான், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.வரும், 7 மற்றும் 8ம் தேதி தமிழகத்தில் இருந்தும், 9ம் மற்றும், 10ம் தேதி கேரளாவை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். 11ம் தேதி முதல், 16ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு, பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.நேற்று துவங்கிய இம்முகாமிற்கு நேற்று முன்தினம் இருந்தே இளைஞர்கள் வந்தனர். அவர்கள் பாலசுந்தரம் ரோட்டில் வரிசையாக படுத்திருந்தனர். இத்தகவல் அறிந்ததும், அவிநாசி ரோடு லட்சுமி மில் அடுத்துள்ள தனியார் மண்டபத்தில் தங்க, போலீசார் ஏற்பாடு செய்தனர். இன்று (நவ., 5) நடக்கும் முகாமில் பங்கேற்க நேற்று வந்த இளைஞர்களுக்கு மாநகர போலீசார் உதவி செய்து வழி நடத்தினர். அம்மண்டபத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.