கோவை;ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க பொருத்தப்பட்ட கேமராக்களின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால் வனத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.கோவை - பாலக்காடு ரயில்வே பாதையில், எட்டிமடை - வாளையாறு இடையேயான 'ஏ' மற்றும் 'பி' ரயில்வே பாதை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறது. இதனால், எட்டிமடை - வாளையாறு ரயில்வே தடத்தில், ரயில் மோதி யானைகள் உயிரிழக்கின்றன. கடந்த, 2022ம் ஆண்டில், மட்டும், ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. இதை தடுக்க, வனத்துறை சார்பில், 11 கி.மீ., தொலைவுள்ள வாளையார் மற்றும் எட்டிமடை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க, குழு பணியமர்த்தப்பட்டது. இந்நிலையில், 'ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சர்வலைன்ஸ்'(ஏ.ஐ.,)எனும், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, 'ஏ' ரயில் வழித்தடத்தில், ஐந்து மற்றும் 'பி' வழித்தடத்தில், ஏழு என, 12 இ-சர்வைலைன்ஸ் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், தெர்மல் இமேஜிங் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுதவிர கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், புதிதாக பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் தற்போது பரிச்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு வருகின்றன. இதில், யானைகள் மட்டுமின்றி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ரயில் பாதை அருகே வருவதை கண்டறிந்து செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதனால், வனத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,'செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் திறம்பட செயல்படுகின்றன. சமீபத்தில் ரயில்பாதை அருகே வந்த யானைகள் குறித்து கேமராக்கள் வாயிலாக தகவல் கிடைத்து அவற்றை உடனடியாக வேறு பக்கம் திருப்ப முடிந்தது. இதேபோல், பல யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை காப்பாற்ற முடிந்தது. இது வருங்காலத்தில் தொடர்ந்தால் ரயில்மோதி வனவிலங்குகள் உயிரிழப்பது முற்றிலும் தடுக்க முடியும்,' என்றனர்.