உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோதனை ஓட்டம் முடியாததால் அத்திக்கடவு ஆர்வலர்கள் அதிருப்தி

சோதனை ஓட்டம் முடியாததால் அத்திக்கடவு ஆர்வலர்கள் அதிருப்தி

அன்னுார்;அத்திக்கடவு திட்ட பணி முடிந்து ஓராண்டு ஆகியும் சோதனையோட்டம் முடியவில்லை என அத்திக்கடவு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அத்திக்கடவு திட்ட பணிகள் முடிவடைந்து ஓராண்டு ஆகிவிட்டது. எனினும் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்தத் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விடுபட்ட குளங்களுக்கான அத்திக்கடவு இரண்டாம் திட்ட பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்ட குழு அறிவித்தது.இதையடுத்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, போராட்ட குழு நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது 1045 குளம் குட்டைகளுக்கும் சோதனை ஓட்டம் முடிந்து விட்டது. முதல்வரிடம் பேசி விரைவில் பயன்பாட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தை துவக்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்தனர். இது குறித்து அன்னுார் அத்திக்கடவு ஆர்வலர்கள் கூறுகையில், 'அனைத்து குளங்களிலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் வடவள்ளி ஊராட்சியில் வேப்பம்பள்ளம் புதூரில் இரண்டு ஏக்கர் குளம் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஓ.எம்.எஸ்., உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட இந்த குளத்திற்கு தண்ணீர் விடவில்லை. அதேபோல் குமரன் கோவில் பின்புறம் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள குட்டை உள்ளது. இந்த குட்டையிலும் ஓ.எம். எஸ் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சோதனை ஓட்டம் நடத்தவில்லை.அரசு உடனடியாக அனைத்து குளம் குட்டைகளுக்கும் சோதனை ஓட்டம் நடத்தி, கசிவுள்ள இடங்களில் கசிவு அடைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி