உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அல்லப்பாளையத்துக்கு இன்னும் அத்திக்கடவு தண்ணி வரலை

அல்லப்பாளையத்துக்கு இன்னும் அத்திக்கடவு தண்ணி வரலை

அன்னுார்; சோதனை ஓட்டம் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அல்லப்பாளையம் ஊராட்சிக்கு அத்திக்கடவு நீர் வரவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,932 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2023 மார்ச் மாதம் சோதனை ஓட்டம் தொடங்கியது. 2024 ஆகஸ்ட் மாதம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அல்லப்பாளையம் ஊராட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து அல்லப்பாளையம் மக்கள் கூறுகையில், 'அருகில் உள்ள கஞ்சப்பள்ளி ஊராட்சி மற்றும் அன்னுார் பேரூராட்சியில் அனைத்து குளங்களுக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட முறை அத்திக்கடவு நீர் வந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தில் எங்கள் ஊராட்சி, ஈரோடு மாவட்டம், எம்மாம் பூண்டியில் உள்ள ஐந்தாவது நீரேற்று நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மிக அதிக தொலைவு என்பதால் ஒரு சொட்டு நீர் கூட இதுவரை வரவில்லை. இது குறித்து பலமுறை ஐந்தாவது நீரேற்று நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். கோவை கலெக்டரிடம் நேரிலும் புகார் தெரிவித்துள்ளோம்,' என்றனர்.இது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடுபதி கூறுகையில், ''இது குறித்து ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தோம். அல்லப்பாளையம் குட்டை, கோனார்பாளையம் குட்டை, வசவன்குட்டை என ஆறு குட்டைகளுக்கும் தண்ணீர் வருவதில்லை. குளம், குட்டைகள் வறண்டு மைதானம் போல் காட்சி அளிக்கின்றன.நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. அதிகாரிகள் விரைவில் குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ