உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாய்ப்பாலின் முக்கியத்துவம் விழிப்புணர்வு வாக்கத்தான்

தாய்ப்பாலின் முக்கியத்துவம் விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவை; தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து நடந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர். உமன்ஸ் சென்டர் பை மதர்உட் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோவை காட்டன் சிட்டி சார்பில், தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள் - நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல் எனும் கருத்தில் விழிப்புணர்வு வாக்கத்தான் நேற்று நடந்தது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த வாக்கத்தனை கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(வடக்கு) தேவநாதன் துவக்கி வைத்தார். மூத்த குழந்தைகள் நல மருத்துவர் நித்யா கூறுகையில்,''தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது எளிமையானது என எண்ணப்படுகிறது. ஆனால், இன்று பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. கருவுற்றது முதல் பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்காக தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. எங்களது வங்கியில், 70 கொடையாளர்கள் உள்ளனர். இதுவரை, 1.7 லட்சம் லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. மேலும், இரு வங்கிகளை ஏற்படுத்த உள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார். உமன்ஸ் சென்டர் பை மதர்உட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் ஜெயகுமார், ரம்யா, ரோட்டரி கிளப் ஆப் கோவை காட்டன் சிட்டி தலைவர் தருண் குமார் ரங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ