கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு பல குரலில் பேசி விழிப்புணர்வு பிரசாரம்
கோவில்பாளையம் : 'கள்ளச்சாராயத்தால் கடும் பாதிப்பு,' என கலைக்குழுவினர் பிரசாரம் செய்தனர்.மதுவிலக்கு துறை மற்றும் வருவாய் துறை இணைந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றன. இதில் நேற்று கோவில்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கதிரவன் கலை குழு சார்பில் தியாகராஜன் உள்ளிட்டோர் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மது அரக்கனைப் போல் வேடம் அணிந்த ஒருவர் பல குரலில் பேசி அசத்தினார். இதில் மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் பேசுகையில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடல்நலம் மன நலம் பாதிக்கப்படும். வருமானம் குறையும். ஒரு முறை தான் என போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கினால் பின்னர் அவை தொடர்ந்து விடும். நம் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் ஆகியோரை மனதில் நினைத்து போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும், என்றார்.எஸ்.ஐ., ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் அறிவுடை நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கணேசபுரம், கரியாம்பாளையம், அன்னூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வடவள்ளியிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.