ஈரியோபைட் சிலந்தி தாக்குதல் அதிகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி, ; தென்னையில், ஈரியோபைட் சிலந்தி மேலாண்மை குறித்து வேளாண் மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆழியாறு பகுதியில் கோவை வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவியர், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, தென்னையில் சிலந்திப்பேன் மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.ஈரியோபைட் சிலந்திகள் நீளமான உடலுடன், இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்தில் இருக்கும். இச்சிலந்திகளை நுண்ணோக்கியின் வாயிலாக மட்டுமே காண இயலும். இவை பருவமடைந்த பெண் பூக்களின் புல்லிவட்டத்தின் இடைவெளியில் காணப்படும்.இவை கருவுறாத பூக்களை தாக்குவதில்லை. இளம் மற்றும் பெரிய சிலந்திகள், வெளிர் நிறத்தில் நீளமான உடலமைப்பையும், புழு போன்ற வடிவமும் கொண்டிருக்கும்.இதன் வாழ்நாள், ஏழு முதல் 10 நாட்களே என்றாலும், முட்டை, இரு புழுபருவங்கள் மற்றும் முதிர்ந்த சிலந்தி என பல்வேறு படிகளை கொண்டது.அதில், 2 - 3 மாதங்களான குரும்பைகளில் வெளிர் மஞ்சள் நிற முக்கோண வடிவ நிறமாற்றங்கள், பிரியாந்த் எனும் இளந்திசு வளையத்திற்கு கீழ் தோன்றும். இது ஆரம்ப அறிகுறியாகும். அதன்பின் இப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாற்றமடைந்து அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் கீழே விழுந்து விடுகின்றன.தாக்கப்பட்ட குரும்பைகள் வளர்ச்சி அடைந்து இளங்காயாக மாறும்போது, பழுப்பு நிறப்பகுதியின் அளவு அதிகமாவதுடன் நீளவாக்கில் வெடிப்புகளும் தோன்றி, அதன் வழியே பிசின் போன்ற திரவம் வெளிப்படும்.இதனால், காய்கள் சிறுத்து விடுவதுடன், அதன் உள்ளே இருக்கும் பருப்பின் கனஅளவும் குறைந்துவிடுகின்றன. தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், உரிமட்டையில் ஏற்படும் வெடிப்பினால் பருப்புகள் கெட்டுவிடும்.இதை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட மரங்களில் இருந்து விழும் குரும்பைகளை சேகரித்து அழித்துவிட வேண்டும். ஊடுபயிராக சணப்பை மற்றும் வரப்பு பயிராக சவுக்கு மரங்களை வளர்ப்பதன் வாயிலாக, இச்சிலந்தி மேலும் பல மரங்களை தாக்காமல் தடுக்கலாம். அஸாடிராக்டின், நீரில் கலந்து தெளிக்கலாம், என, மாணவியர், விவசாயிகளிடம் விளக்கினர்.