| ADDED : மார் 17, 2024 11:39 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி கடும் துர்நாற்றம் வீசியது.பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல், இதுவரை தினமும் பிரச்னைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.தற்போது, வீட்டு இணைப்புகள் கொடுப்பதில் தரமாகபணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஆங்காங்கே இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளுக்கே கழிவுநீர் திரும்பி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன், அன்சாரி வீதியில் ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறிய கழிவுநீர், வீட்டுக்குள் புகுந்தது.இது போன்ற பிரச்னைகளை தீர்க்க நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.ஆனாலும், தீர்வு கிடைக்கவில்லை.இந்நிலையில், பொள்ளாச்சி - உடுமலை ரோடு, மின்வாரிய அலுவலகம் அருகே பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறியதால், அப்பகுதியே கடும் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், மூக்கை பொத்திக்கொண்டு சென்றனர். இதுபோன்று பிரச்னைகளை தீர்க்க நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.