பூங்காவில் இறகுப்பந்து மைதானம்; ராமலிங்க நகர் பொதுமக்கள் எதிர்ப்பு
கோவை,;கோவை, 44வது வார்டு கே.கே.புதுார், ராமலிங்க நகரில், 2008ல் மாநகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதனருகே, யோகா பயிற்சி மேற்கொள்ள அரங்கம், மைதானம் உள்ளது. இவ்விடத்தில், எம்.எல்.ஏ., நிதியில் இறகுப்பந்து மைதானம் அமைக்க முடிவு செய்து, மார்ச் மாதம் பூமி பூஜை போடப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அப்பகுதியினர் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. இறகுப்பந்து மைதானம் அமைக்க மண் கொட்டப்பட்டுள்ளது. நேற்று, இங்கு திரண்ட குடியிருப்புவாசிகள், பூங்காவை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது என தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'நல்ல நிலையில் உள்ள பூங்காவை அழித்து, இறகுப்பந்து மைதானம் அமைப்பதற்கு பதிலாக, வேறு ரிசர்வ் சைட்டில் உருவாக்கலாம். இதனருகே, 75 சென்டில் பெரிய பூங்கா உள்ளது; அவ்வளாகத்தில் அமைக்கலாம். வாகனங்கள் நிறுத்த போதிய வசதி உள்ளது' என்றனர்.