பணி ஆய்வாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு
கோவை; தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், மாநிலம் முழுவதும், 348 பணி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, சென்னை, திருச்சி, சேலம் உட்பட எட்டு மாவட்டங்களில் பணிபுரிவோருக்கு கோப்புகளை கையாளுதல், கள ஆய்வு போன்ற அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இருந்தவாறு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, காணொலி காட்சி வாயிலாக நேற்று, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில், 348 பணி ஆய்வாளர்களுக்கு பயிற்சி வகுப்பு துவங்கியது. கலெக்டர் பவன்குமார், கோவை எம்.பி., ராஜ்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். உணவு, தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை பேராசிரியர்கள் பயிற்சி வழங்குகின்றனர்.