உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முகவரி கேட்டு வருபவர்களிடம் உஷாரா இருங்க! ஓ.டி.பி., நெம்பர் சொல்லாதீங்க!

முகவரி கேட்டு வருபவர்களிடம் உஷாரா இருங்க! ஓ.டி.பி., நெம்பர் சொல்லாதீங்க!

மேட்டுப்பாளையம் : மோட்டார் சைக்கிளில் வந்து முகவரி கேட்போரிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மொபைல் போன்களில் வரும், ஓ.டி.பி., நம்பரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.காரமடை காவல்துறை சார்பில், ஆசிரியர் காலனியில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு காரமடை நகராட்சி துணைத் தலைவர் மல்லிகா தலைமை வகித்தார். சப்--இன்ஸ்பெக்டர் பாலாஜி வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூட்டத்தில் பேசியதாவது:பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ள, தமிழக காவல்துறை, 'காவல் உதவி ஆப்' அறிமுகம் செய்துள்ளது. இதை ஒவ்வொரு மகளிரும், தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.மேலும், மோட்டார் பைக்கில் வருபவர்கள், பெண்களிடம் விலாசம் கேட்டால், தங்கள் நகைகளை பாதுகாப்பு செய்த பின், அவர்களுக்கு பதில் கூற வேண்டும். தற்போது, மொபைல் போன் வாயிலாக, தமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் புதிதாக உருவாக்கி உள்ளது. அவர்கள் வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி, உங்களுக்கு ஒரு 'ஓ.டி.பி.' நம்பர் வரும். அதை திருப்பி சொல்லுங்கள் என கூறுவர். நீங்கள் கூறிய சிறிது நேரத்தில், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும், அவர்கள் ஆன்லைன் வாயிலாகவே எடுத்துக் கொள்வர். எனவே மொபைல் போனில், ஓ.டி.பி., நம்பர் சொல்லுங்கள் என, யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம். எனவே பொதுமக்கள், மகளிர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.அதேபோன்று உங்கள் பகுதியில் தீர்க்கப்படாத, பொது பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அதை போலீசில் மனுவாக எழுதி கொடுக்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு, காவல்துறை சார்பில் அனுப்பி, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போல் உள்ளது என, அந்த துறை அதிகாரிகளுக்கு நாங்கள் புகார் செய்வோம். அதனால் விரைவில் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு இன்ஸ்பெக்டர் பேசினார்.கூட்டத்தில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர், முதியோர் ஆகியோர் என, 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். வார்டு கவுன்சிலர் தியாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை