பத்திரம் வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம்
போத்தனுார்: அசல் பத்திரம் வழங்க, 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கோவை, சித்தாபுதுார், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் வெள்ளலுாரில் உள்ள சிங்காநல்லூர் சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து தனக்கு வரவேண்டிய அசல் பத்திரத்திற்காக சார்-பதிவாளர் (பொறுப்பு) நான்ஸி நித்யா கரோலின் என்பவரை அணுகினார். அவர் அலுவலக இளநிலை உதவியாளர் பூபதிராஜாவிடம் கள ஆய்வு செய்வதுடன், பத்திரத்தை தர, 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று வருமாறும் அறிவுறுத்தியுள்ளார்.லஞ்சம் தர விரும்பாத கருப்புசாமி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கூறினார்.அவர்களிடமிருந்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்ட கருப்புசாமி, கள ஆய்வுக்கு பின் நேற்று இரவு ரூ.35 ஆயிரம் தொகையை பூபதிராஜாவிடம் கொடுத்தார்.பூபதிராஜா அத்தொகையை நான்ஸி நித்யா கரோலினிடம் வழங்கினார். அப்போது அலுவலகம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், இருவரையும் கைது செய்தனர். தொகை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, நான்ஸி நித்யா கரோலினின் காரை சோதனை செய்தனர். காரில் இருந்த ரூ.13 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இருவரும் ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இருவரிடமும், போலீசார் விசாரணை நடத்தினர். கோவை வெள்ளலுார் சாலையில் உள்ள சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
அதிக புகார்கள்
கைதான நான்ஸி நித்யா கரோலின் மீது லஞ்சம் பெறுவதாக அதிகளவு புகார்கள் வந்தன. லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 50 ரூபாய் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நான்ஸி மற்றும் பத்திர பதிவு எழுத்தர் அலுவலக ஊழியர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
அதிக புகார்கள்
கைதான நான்ஸி நித்யா கரோலின் மீது லஞ்சம் பெறுவதாக அதிகளவு புகார்கள் வந்தன. லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 50 ரூபாய் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நான்ஸி மற்றும் பத்திர பதிவு எழுத்தர் அலுவலக ஊழியர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.