ரூ.3.4 கோடியில் பாலம் பணி; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே பாலம் பணியை, சேலம் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் உள் தணிக்கை செய்தார்.பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட, 2024-25ம் ஆண்டுக்கான உள் தணிக்கையை, சேலம் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மேற்கொண்டார். அதில், பொள்ளாச்சி அருகே, சேர்வகாரன்பாளையத்தில், 3.40 கோடி ரூபாய் செலவில், கட்டப்படும் பாலம் பணிகளை தணிக்கை செய்தார். பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.அதில், நெடுஞ்சாலைத்துறை பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், ஓமலுார் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், சேலம் கோட்ட கிராம சாலைகள் உதவி பொறியாளர்கள் பார்த்திபன், அரவிந்த் மற்றும் பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு பொறுப்பேற்றது முதல் நெடுஞ்சாலைத்துறை பணிகள் உள் தணிக்கை செய்யப்படுகிறது. அதில், ஏப்., மாதம் முதல் மார்ச் வரையிலான மேற்கொள்ளப்படும் பணிகள் மே மாதத்தில் ஆய்வு செய்யப்படும்.அதன்படி, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் பணிகளை, உள் தணிக்கை செய்ய, சேலம் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர், நேற்று பணிகளை ஆய்வு செய்தார்,' என்றனர்.