உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பலமிழந்த பாலத்தால் பஸ் வசதி... துண்டிப்பு நான்கு மலை கிராம மக்கள் அவதி

 பலமிழந்த பாலத்தால் பஸ் வசதி... துண்டிப்பு நான்கு மலை கிராம மக்கள் அவதி

தொண்டாமுத்தூர் சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள நான்கு மலை கிராமங்களுக்கு, 10 மாதங்களாக பஸ் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பாலத்தை சீரமக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுவாணி வனப்பகுதியில், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெரியாற்றில், பிப்ரவரியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பெரியாற்றின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்து பலவீனமானது. அதிக பாரமுள்ள வாகனங்கள் சென்றால், பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தை கடந்தே பொட்டபதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரத்தி, ஜாகிர்போரத்தி ஆகிய மலை கிராமங்களுக்கு செல்ல முடியும். இந்த கிராமங்களில், 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்காக, காந்திபுரத்தில் இருந்து சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, சிறுவாணி சர்வீஸ் பஸ் இயக்கப்படுகிறது. பாலம் சேதமடைந்ததால், பிப்., முதல் இப்பகுதிகளுக்கு செல்லும் பஸ் சாடிவயலுடன் திரும்பி விடுகிறது. இதனால், 4 மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள், வேலைக்கு, மருத்துவமனைக்கு, 500 ரூபாய் கொடுத்து, பயணிகள் ஆட்டோவில் சென்று வருகின்றனர். இந்த பாலத்தை சீரமைக்க வேண்டிய வனத்துறை, நிதி இல்லை என்று தாமதித்து வருகிறது. புதிய பாலம் கட்டி, 10 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ள பஸ் வசதியை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ