உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள்; பதறும் வாகன ஓட்டுநர்கள்

நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள்; பதறும் வாகன ஓட்டுநர்கள்

பொள்ளாச்சி; சர்வீஸ் ரோட்டை தவிர்த்து, நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. பொள்ளாச்சி - கோவை இடையிலான நான்குவழிச்சாலையில், அதிகப்படியான அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இவ்வழித்தடத்தில் ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுபுதுார், கிணத்துக்கடவு, மரத்தோப்பு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, சுந்தராபுரம், குறிச்சி ஆகிய 'ஸ்டேஜ்' ஒதுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் சென்று, பயணியரை ஏற்றி இறக்கிச்செல்ல வேண்டும். ஆனால், சில பஸ் டிரைவர்கள், தேசிய நெடுஞ்சாலையிலேயே பஸ்களை நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்கி விடுகின்றனர். இதனால், பின்னால் வேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், செய்வதறியாது திணறுகின்றனர். நிலை தடுமாறி விபத்து அபாயம் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது. இதேபோல, தேர்முட்டியில் இருந்து ஊஞ்சவேலம்பட்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்திலும், ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ரோட்டை அகலப்படுத்தினாலும், சர்வீஸ் வழித்தடத்தில் பஸ்களை இயக்க எவரும் முனைப்பு காட்டுவதில்லை. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்வீஸ் ரோடுகளுக்குள் நுழைவதே இல்லை. ஒவ்வொரு டிரைவர்களும் இரு மார்க்கமாக பஸ்களை இயக்கும் போது, இதே செயலில் ஈடுபடுகின்றனர். விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, துறை ரீதியான அதிகாரிகளின் கண்காணிப்பு அவசியம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி