கன்று வீச்சு நோய்க்கு தடுப்பூசி முகாம் துவக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள கிடாரி கன்றுகளுக்கு, புருசெல்லா நோய் தடுப்பு மருந்து செலுத்தும் பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில், கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு, மூன்று முறை நடத்தப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நஞ்சுக்கொடி, ரத்தம் மற்றும் பால் வாயிலாக நச்சுயிரி வெளியேறும். மாசுபட்ட நஞ்சுக்கொடி மற்றும் ரத்தத்தை தொட்டு சுத்தம் செய்வதாலும், பாலை நன்கு காய்ச்சாமல் குடிப்பதாலும் இந்நோய் மனிதர்களுக்கும் பரவுகிறது.பண்ணையில் சுகாதாரமான பராமரிப்பு முறைகளை பின்பற்றாமல் இருப்பது, கன்று வீச்சு ஏற்பட்ட கன்றுகளை முறையாக அப்புறப்படுத்தாமை ஆகியவை நோய் பரவுவதற்கு காரணமாகின்றன.எனவே, கருச்சிதைவான மாட்டை கால்நடை டாக்டரின் ஆலோசனைப்படி, உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். மேலும், கருச்சிதைவு நடந்த பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய் காணும் பகுதிகளில் கன்றுகளுக்கு புருசெல்லா நோய் தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.அவ்வகையில், கோவை மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் வாயிலாக, 16 ஆயிரம் கன்றுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, வரும், 21 நாட்களுக்கு முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில், 4 மாதம் முதல் 8 மாதங்களான அனைத்து கிடாரி கன்றுகளுக்கும் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் செலுத்தப்படும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதன்படி, கிணத்துக்கடவு அருகே தேவனாம்பாளையம் கிராமத்தில், கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை டாக்டர் அடங்கிய குழுவினர், 40 கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.தொடர்ந்து, ஆங்காங்கே நடத்தப்படும் முகாமில், கிடாரி கன்றுகளைக் கொண்டு வந்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.