கோவை : பல ஆயிரம் பயணிகள் தினமும் பயன்படுத்தும் காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட்டில் அடிப்படை வசதிகள் இன்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.கோவையின் பழமையான பஸ் ஸ்டாண்ட்களில், ஒன்றான காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், 1974 ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், கோபி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், ஓசூர், கிருஷ்ணகிரி, காங்கேயம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.தினமும் பல ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும், இந்த பஸ் ஸ்டாண்ட் தனது பொலிவை முற்றிலும் இழந்து விட்டது. சமீபகாலமாக சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் இங்கு, சுகாதாரம் என்பது மருந்துக்கு கூட இல்லை. பஸ் ஸ்டாண்ட்டின் உட்புறம் எங்கு திரும்பினாலும், குப்பை குவியலாகவே காணப்படுகிறது. போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கழிவறைகள் முறையாக சுத்தப்படுத்தாததால், துர்நாற்றம் வீசுகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட, குப்பைத்தொட்டிகள் இங்குதான் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் என்றால், பஸ் ஸ்டாண்ட்டில், பயணிகளின் பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறையின் நிலை, வேறுவிதமாக உள்ளது. அந்த அறையை தனிநபர் ஒருவர், பழங்கள், வாட்டர் பாட்டில்கள், முறுக்கு, சிப்ஸ் விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார். இதற்கு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, அல்லது அவராக அனுமதியை எடுத்துக் கொண்டாரா எனத் தெரியவில்லை.பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கில், கட்டணம் எவ்வளவு என எழுதப்படாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட்டின் அனைத்து பகுதிகளிலும், இருசக்கர வாகனங்கள் வலம் வருவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன.பஸ் ஸ்டாண்ட்டின் மேற்புறத்தில், முன்னர் விடுதி அறைகள் செயல்பட்டு வந்தன. பல்வேறு காரணங்களால், அவை மூடப்பட்டன. தற்போது இரவில், இவ்விடுதி அறைகள் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விடுதி அறைகளை புனரமைத்து, வாடகைக்கு விடும் பட்சத்தில் மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். பல்வேறு மாவட்ட மக்களும் வந்து செல்லும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், கோவையின் அடையாளமாக இருந்தது. ஆனால், தற்போது இந்த பஸ் ஸ்டாண்ட் கோவையின் அவமானமாக மாறியுள்ளது. இதை மாற்ற, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'விடுதி அறைகள் சுத்தப்படுத்தி வாடகைக்கு விடப்படும்'
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில், உள்ள விடுதி அறைகளை புனரமைத்து, வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் நடக்கும் விதிமீறல்களை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படும், குப்பை உடனடியாக அகற்றப்படும். விரைவில் அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும்,'' என்றார்.