உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை : முதல்வருக்கு வர்த்தக சபை கோரிக்கை

 மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை : முதல்வருக்கு வர்த்தக சபை கோரிக்கை

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள நிலையில், காலக்கெடு நிர்ணயித்து, போதிய தகவல்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கைக்கு புத்துயிர் அளித்து சமர்ப்பிக்க வேண்டும் என, முதல்வருக்கு இந்திய தொழில்வர்த்தக சபை கோவை கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கோவை, தமிழகத்தின் தொழில் தலைநகரம், இந்தியாவின் ஜவுளிப் பள்ளத்தாக்கு. தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, பொதுசுகாதாரம், கல்வி என அதி வேகத்தில் வளர்ந்து வரும் இந்நகரம், போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் பொருளாதார போட்டித் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும். மெட்ரோ ஏன் அவசியம் வரும் 2030ல் கோவையின் மக்கள் தொகை 40 லட்சமாக இருக்கும். திட்டமிடா நகர்ப்பகுதிகள் இணைவு, நகரங்களுக்கு இடையிலான மக்களின் இடம்பெயர்வு ஆகியவை போக்குவரத்துக்கான அபரிமிதமான தேவையை உருவாக்கும். பரபரப்பான நேரங்களில், அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சராசரி போக்குவரத்து நகர்வு வேகம், மணிக்கு 14 முதல் 18 கி.மீ.,யாக உள்ளது. தென்னிந்தியாவில் வாகனப்பெருக்கம் அதிகம் கொண்ட நகரமாக உள்ளது. ஜவுளி, இன்ஜினீயரிங், பம்ப், ஐ.டி., தொழில்நுட்ப பூங்காக்கள், மருத்துவ சுற்றுலா, கல்வி நிறுவனங்கள் என பெரும் பங்களிப்பைச் செய்து வரும் கோவைக்கு, நவீன பெருங்கூட்டமாக பயணிகளை அழைத்துச் செல்லும் போக்குவரத்து வசதி, பொருளாதார, தொழில்துறை மேம்பாட்டுக்கு மிக அவசியம். மேம்படுத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின் வாயிலாக இதைச் சாத்தியமாக்க முடியும் என நம்புகிறோம். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை, ஒருங்கிணைப்பு முகமையாகக் கொண்டு, மத்திய மாநில அரசுகளின் கூட்டு ஒத்துழைப்போடு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கலாம். இதற்கு கோவையின் தொழில், வர்த்தக, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள் என பலரையும் ஒருங்கிணைந்து, விரிவான திட்ட அறிக்கைக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கிட, தொழில்வர்த்தக சபை தயாராக உள்ளது. தமிழக அரசு உடனடியாக, மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்