| ADDED : டிச 08, 2025 05:15 AM
கோவையில் தற்போதுள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒட்டி, முதல் மருத்துவக் கல்லுாரியும் துவங்கப்பட்டது. அது தற்போதைய கலைக்கல்லுாரி கட்டடம். L.M.P (Licensed Medical Practitioner) டிப்ளமோ வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது நீண்டகாலம் செயல்படவில்லை.கோவையில் கடந்த காலத்தில் நகராட்சியும், மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் முயற்சியில் இருந்தது. ராமநாதபுரத்தில் ஒரு பகுதி நேர மருத்துவ மையம் நடத்தப்பட்டது. பெரியகடை வீதியில் சித்த வைத்தியசாலையும், மக்களுக்குச் சேவை செய்தது. 1910களில் கோவையில் 75 ஆங்கில மருத்துவ நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். இவர்களில் சிலர் தனியாகவும் மருத்துவமனைகள் நடத்தினர். டாக்டர் சி.எஸ்.ராமசாமி, ராமநாதபுரம் அருகே தனது சொந்த பாலிகிளினிக்கை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்தார். கோவையில் கிறிஸ்தவ அமைப்புகளும், மருத்துவ சேவையில் முக்கிய பங்கு வகித்தன. ரோமன் மிஷனும், லுாதரன் மிஷனும் நடத்திய மருத்துவமனைகள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. லுாதரன் மிஷனில் ஆரோக்கியசாமி, தனது வீட்டிலேயே கண் மருத்துவமனை துவங்கி முற்றிலும் இலவசமாக, மக்களுக்கு சேவை செய்தது குறிப்பிடத்தக்கது. அக்காலத்திலேயே, பிராணிகளுக்கு என, இரண்டு மருத்துவமனைகள் இருந்தன. ஒன்று விவசாயக் கல்லுாரியில்; மற்றொன்று இஸ்மாயில் ராவுத்தர் தெருவில் இருந்தது.