சிட்டி கிரைம் செய்திகள்:ரோட்டில் அடி, உதை
ரோட்டில் அடி, உதை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சிவகுமார், 40. இவர் நேற்று முன்தினம் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த நபர் அவர் மீது மோதினார். சிவகுமார் அவரிடம், பார்த்து போகுமாறு தெரிவித்தார். ஆத்திரமடைந்த அந்நபர், சிவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி அந்நபர் மரக்கட்டையால் சிவகுமாரை தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், அந்நபர் நீலகிரி மாவட்டம் குன்னுாரை சேர்ந்த சந்தோஷ்குமார், 31 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மாமனாருக்கு வெட்டு கணபதி, கணேஷ் லே-அவுட்டை சேர்ந்தவர் ஜெயகுமார், 67. இவரது மகள் ஜென்ஸி ஜெனிபர், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, 34 என்பவருக்கும், திருமணம் முடிந்தது. ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்த பாலாஜி, குடி போதையில் மனைவியை அடிக்கடி தாக்கினார். இதனால், அவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, 1 ம் தேதி ஜெயகுமார் வீட்டுக்கு வந்த பாலாஜி, ஜென்ஸி ஜெனிபரை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஜெயகுமார் அவரை தடுத்து சமாதானம் செய்தார். ஆனால், பாலாஜி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பின்னந்தலையில் வெட்டினார். காயமடைந்த ஜெயகுமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் பாலாஜியை சிறையில் அடைத்தனர்.