உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

பாத்திரங்கள் திருட்டு

கோவை, கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, திருமண மண்டபம் உள்ளது. மேலாளராக பழனியப்பன் உள்ளார். திருமண மண்டபத்தில் சமையல் பாத்திரங்கள், ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இரு தினங்களுக்கு முன், மண்டபத்தின் பின்பகுதி வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கதவின் பூட்டை உடைத்து, சில்வர் பாத்திரங்களை திருடிச் சென்றனர். மறுநாள் திருமண மண்டபத்துக்கு வந்த பழனியப்பன், அறையின் பூட்டு உடைக்கப்பட்டு பாத்திரங்கள் திருடப்பட்டிருப்பதை கண்டார். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மூன்று பெண்கள் பாத்திரங்களை திருடிச் செல்வது தெரிந்தது. புகாரின்படி, கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பெண்களையும் தேடி வருகின்றனர்.

கத்தியை காட்டி பணம் பறிப்பு

கோவை ரத்தினபுரியை சேர்ந்த சந்தோஷ்குமார், 40. இரு தினங்களுக்கு முன், தயிர் இட்டேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர், மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அந்நபர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.500 ஐ பறித்துக் கொண்டு தப்பினார். சந்தோஷ்குமார் புகாரின் பேரில், வழக்கு பதிந்த ரத்தினபுரி போலீசார் விசாரித்தனர். பணப்பறிப்பில் ஈடுபட்டது, வடவள்ளி, வீரகேரளத்தை சேர்ந்த விஷ்ணுபிரகாஷ், 26 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

புகையிலைப் பொருட்கள் கடத்தல்

கோவை காட்டூர் போலீசார் காந்திபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த இருவரை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் தப்பினார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். சோதனையில், அவரிடம் மூன்றரை கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், அஸ்சாம் மாநிலம், மாரிகோன், நாகபந்தாவை சேர்ந்த ஆஷிக் அலி, 25 எனத் தெரிந்தது. விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை கடத்தியது தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

முதியவரை தாக்கியவர் கைது

பீளமேடு, ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் அகர்வால், 65; தண்ணீர் பந்தல் ரோடு பாலாஜி நகரில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அங்கு மது போதையில் வந்த ஒருவர், கம்பெனியின் கேட்டை தட்டிக் கொண்டே இருந்தார். இதை பார்த்த ஊழியர் அபிதேஷ் என்பவர், ராஜ்குமார் அகர்வாலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கம்பெனிக்கு வந்து, போதை நபரை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆத்திரமடைந்த போதை நபர், ராஜ்குமார் அகர்வாலை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ராஜ்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ராஜ்குமாரை தாக்கியது வி.கே.வீதியை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இளம் பெண் மர்ம மரணம்

ரத்தினபுரியை சேர்ந்தவர் மனோஜ் குமார், 32; மனைவி சோனாலி, 28. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. கடந்த 21ம் தேதி மனோஜ் குமார் வேலைக்கு சென்று விட்டார். அவர் மதிய உணவு உண்ண வீட்டிற்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. மனோஜ் குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சோனாலி மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

சுங்கம் பைபாஸ் வாலாங்குளம் பார்க் பகுதியில், வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவரிடம் விசாரித்தனர். அவர் கேரளா வயநாடு மாவட்டத்தை சேர்ந்த முகமது சாவத், 24 என்பதும், இங்கு கஞ்சா விற்பனைக்காக வந்திருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து, 150 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை