உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க அறிவுரை

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க அறிவுரை

காரமடை : ''உப்பு இல்லாமல் உயிர் வாழலாம்; ஆனால் நட்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது. எனவே, மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்,'' என, கவிதாசன் பேசினார். காரமடை கன்னார்பாளையம் துவக்கப்பள்ளியில் இலவச சீருடைகள் வழங்கும் விழா நடந்தது. விஜயலட்சுமி பொது நல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், நல்லாசிரியர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூட்ஸ் நிர்வாக இயக்குனர் கவிதாசன் பேசியதாவது: மாணவர்கள் முடங்கி கிடக்காமல், ஆற்று நீரில் எதிர்த்து செல்லும் மீன்களை போல் தன்னம்பிக்கையுடன் எழுந்து நடக்க வேண்டும். ஒருவர் உயர்ந்தவராகவும், சரித்திரம் படைத்தவராக இருந்தாலும், சாதிக்க வேண்டியது என்ன என்று சிந்திக்க வேண்டும். நாம் சாதாரண வாழ்க்கை வாழக்கூடாது. கடுமையாக உழைத்து சாதனை படைத்த வாழ்க்கையாக வாழ வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். அதேபோல் மாணவர்களும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். உப்பு இல்லாமல் உயிர் வாழலாம்; ஆனால் நட்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது. எனவே நீங்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு கவிதாசன் பேசினார்.

முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சஹனானந்தர், எம்.எல்.ஏ., சின்னராஜ், உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் வெள்ளிங்கிரி, சாமப்பா உட்பட பலர் பேசினர். சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை ஆகிய பள்ளிகளை சேர்ந்த 800 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. கன்னார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 13 மாணவர்களுக்கு, கல்குழி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தலா இரண்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை ராஜலட்சுமி சாமப்பா குடும்பத்தினர் செய்திருந்தனர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபால்சாமி வரவேற்றார். சிக்காரம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை