உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிகச்சிறிய மீன்தொட்டி வடிவமைப்பு :லிம்கா சாதனைக்கு மாணவர் முயற்சி

மிகச்சிறிய மீன்தொட்டி வடிவமைப்பு :லிம்கா சாதனைக்கு மாணவர் முயற்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி என். ஜி.எம்., கல்லூரி மாணவர், லிம்கா சாதனைக்காக உலகிலேயே மிக சிறிய மீன் தொட்டியை வடிவமைத்துள்ளார். பொள்ளாச்சி என். ஜி.எம்., கல்லூரி இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு மாணவர் கவிபிரசாந்த். சிறு வயது முதல் மீன் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர், மீன்களுக்கான தொட்டியையும் வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். இவர் 'லிம்கா' மற்றும் 'கின்னஸ்' சாதனைகளை செய்யும் வகையில், உலகிலேயே மிக சிறிய அளவிலான மீன் தொட்டிகளை உருவாக்கியுள்ளார். மாணவர் கவிபிரசாந்த் கூறியதாவது: சமீபத்தில், நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர், 3 செ.மீ., நீளம், 2.4 செ.மீ., அகலம், 1.4 செ.மீ., உயரம் கொண்ட சிறிய மீன் தொட்டியை உருவாக்கினார். 10 மி.லி., தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த மீன் தொட்டியில் இரண்டு சிறிய மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டதாக அறிந்தேன். இதைவிட சிறிய அளவில் மீன் தொட்டிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதனால், 2.8 செ.மீ., நீளம், 2.3 செ.மீ., அகலம், 1.3 செ.மீ., உயரம் கொண்ட உலகிலேயே மிக சிறிய மீன் தொட்டி வடிவமைத்துள்ளேன். இந்த சிறிய மீன் தொட்டி ஒன்றரை நாளில் வடிவமைத்தேன். இதில், 7.5 மி.லி., தண்ணீர் விட்டு, 'ஜீப்ரா' ரகத்தை சேர்ந்த நான்கு மீன் குஞ்சுகள் வளர்க்க விட்டுள்ளேன். தொட்டியில் இயற்கை காட்சி அடங்கிய படம், செடிகள், வண்ணக் கற்கள் பொருத்தியுள்ளேன். இந்த தொட்டியை, 'லிம்கா' மற்றும் 'கின்னஸ்' சாதனைக்காக அனுப்பவுள்ளேன், என்றார். மாணவரின் படைப்புக்கு, கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், முதல்வர் பத்ரி ஸ்ரீமன் நாராயணன் உட்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி