கோவை: கோவை, கிராஸ்கட் ரோட்டில், கோயம்புத்துார் விழாவின் ஒருபகுதியாக நடந்த, வீதி விழா நிகழ்ச்சி திருவிழா கொண்டாட்டம் போல அமைந்தது. கோவையின், பெருமைகளை பறைசாற்றும் விதமாக, ஆண்டுதோறும், கோயம்புத்துார் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த, 14ம் தேதி முதல் விழா நடக்கிறது. பத்தாம் நாளான நேற்று, விழாவின் ஒரு பகுதியாக, 'வீதி விழா' கிராஸ்கட் ரோட்டில் நேற்று மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடந்தது. இதில், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அதன் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவும், இளைஞர்களின் சைக்கிள் சாகசம், ஒயிலாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மியாட்டம், சிலம்பாட்டம் பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், தாரை, தப்பட்டை, ஜமாப் உள்ளிட்ட, 17 வகையான நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், மொத்தம், 450க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று, அசத்தினர். எப்போது, பரபரப்பாகவும், போக்குவரத்து நிறைந்தும் காணப்படும், கிராஸ்கட் ரோட்டில், நேற்று, வண்ண வண்ண விளக்குகளும், பலவிதமான பாரம்பரிய இசை, நடனம், யோகா நிகழ்ச்சியால், கிராஸ்கட் ரோடு முழுவதும் திருவிழா கொண்டாட்டமாக மாறியது. இந்நிகழ்ச்சிகளை, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை விழா குழுவினர் மற்றும் அக்ஷரா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக, கிராஸ்கட் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ராம்நகர், 100 அடி ரோடு வழியாக, போக்குவரத்து மாற்றம் செய்திருந்தனர். ஏராளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.