| ADDED : ஜன 19, 2024 04:22 AM
கோவை : கோவை சரகமான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முன்னாள் படை வீரர்கள், ஊர்காவல் படையினர் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்துவோர், உரிமம் இல்லாத துப்பாக்கிகள், ஏர்கன் போன்றவற்றை பயன்படுத்துவோர் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து டி.ஐ.ஜி., சரவணசுந்தர் கூறியதாவது:கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் துப்பாக்கி பயன்படுத்துவோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. சுமார், 3 ஆயிரம் பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இறந்து போனவர்கள் பெயரில் இருந்த துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்பட்டுள்ளது. சிலர் துப்பாக்கி தேவையில்லை என ஒப்படைத்து விட்டனர். தேர்தல் தேதி அறிவித்த பின் தான் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் பெறப்படும். கடந்த தேர்தலில் முறைகேடுகள், விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.