கோவை;சின்னியம்பாளையம் ஊராட்சியில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள 'ரிசர்வ் சைட்'டை மீட்க, எட்டு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க, கோவை கலெக்டருக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சூலுார் ஒன்றியம், சின்னியம்பாளையம் ஊராட்சி ஆசிரியர் காலனியில், ஊராட்சிக்குச் சொந்தமான 'ரிசர்வ் சைட்'டை, முன்னாள் ஊராட்சி தலைவர் தேவராஜன், போலி ஆவணங்கள் தயாரித்து, தற்போது ஊராட்சி தலைவராக இருக்கும், அவரது மனைவி ராஜலட்சுமி பெயருக்கு கிரையம் செய்திருப்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு ஆசிரியர் நகர் பகுதி மக்கள் புகார் அனுப்பினர்.சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தபோது, சமுதாய கூடம் கட்டுவதற்கு ஒதுக்கிய இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்து கிரையம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.பத்திரப்பதிவை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவரிடம் இருந்து ஊராட்சி மன்றம் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டார்.அரசு அதிகாரிகள் எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்காததால், ஆசிரியர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், அரசுக்கு சொந்தமான பூங்கா மற்றும் சமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய இடங்களை மீட்க உத்தரவிட கோரியிருந்தார்.அதில், சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி செய்து பிறப்பித்த உத்தரவு, போலி ஆவணம் சமர்ப்பித்து கிரையம் செய்த பத்திரத்தை ரத்து செய்ய, மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அளித்த உத்தரவுநகல்களையும் இணைத்திருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தெரிவித்துள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்பதற்கு, எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், உள்ளூர் திட்ட குழும உறுப்பினர் செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.