| ADDED : நவ 24, 2025 06:25 AM
கோவை: அரசுப் பணிகளில் கருணை அடிப்படையிலான நியமன முறையில் மாநில அரசு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இனி துறை வாரியாக இல்லாமல், மாநில அளவிலான ஒரே முன்னுரிமை பட்டியல் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து துறைங்களிலும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதுவரை, கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து வந்தனர். இனி, நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும் மாநில அளவிலான ஒரே முன்னுரிமை பட்டியலில் இணைக்கப்பட உள்ளன. நிபந்தனை ஒரு துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களில், அதிகபட்சம் 5 சதவீதம் வரை மட்டுமே கருணை அடிப்படையில் நிரப்ப முடியும் என்பதால், பணிக்கு விண்ணப்பிப்பவரின் குடும்பம் வறுமை நிலையில் இருக்க வேண்டும்; குடும்பத்தில் வேறு எந்த உறுப்பினரும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் நிரந்தரப்பணியில் இருக்கக்கூடாது; ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் போன்ற நிபந்தனைகள் உள்ளன. அதன்படி, அரசு ஊழியர் இறந்த தேதி அல்லது மருத்துவ காரணங்களால் பதவி விலகிய தேதி முதல் 3 ஆண்டுகளுக்குள் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த மாநில அளவிலான பட்டியலை பராமரிக்க பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படுகிறது. இணையதளம் பயன்பாட்டிற்கு வரும் வரை, ஆக. 4, 2025ம் தேதிக்கு முந்தைய விதிகளின்படி நியமனங்கள் தொடரும் எனவும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து ஓர் ஆண்டிற்குள், தகுதியின் அடிப்படையில் பணி வரன்முறை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 3 மாதங்களுக்குள் துறைகளில் காலியிடம் இல்லையென்றால், விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, மாநில அளவிலான பட்டியலின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.