| ADDED : பிப் 18, 2024 11:14 PM
அன்னுார்;பல கோடி ரூபாயில் வளர்ச்சி பணி நடந்தும், வரிவசூலில் மாவட்டத்தில் கடைசி இடத்தில் அன்னுார் உள்ளதாக பேரூராட்சி ஊழியர்கள் புலம்புகின்றனர்.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில் 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பேரூராட்சியில் சொத்து வரி செலுத்துவோர் 9,888 பேரும், குடிநீர் இணைப்புதாரர்கள் 5,662 பேரும் உள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட உரிம கட்டணம் செலுத்துவோர், தொழில்வரி செலுத்துவோர் உள்ளனர்.சொத்து வரியாக ஆண்டுக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய் வசூல் ஆக வேண்டும். குடிநீர் கட்டணமாக ஆண்டுக்கு 84 லட்சத்து 37 ஆயிரத்து 200 ரூபாய் வசூல் ஆக வேண்டும். இத்துடன் தொழில்வரி, லைசன்ஸ் கட்டணம் என ஐம்பது லட்சம் ரூபாய் பேரூராட்சிக்கு வரி வசூல் செய்யப்பட வேண்டி உள்ளது. நடப்பாண்டில் முதல் அரையாண்டு மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கு வரி வசூல் செய்யும் பணியில் வரிவசூலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் வரி வசூல் செய்து வருகின்றனர்,இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில்,' குளக்கரையில் துவங்கி உப்பு தோட்டம் வழியாக அவிநாசி ரோடு வரை ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாயில் சாலை அமைக்கப்படுகிறது. நகரில் நடப்பாண்டில் கான்கிரீட் சாலை, கழிவுநீர் வடிகால் என இரண்டு கோடி ரூபாய்க்கு பணிகள் நடக்கின்றன.ஒரே ஆண்டில் 3 கோடி ரூபாய்க்கு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐந்தரை கோடி ரூபாயில் பேரூராட்சி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வரி வசூலில் மாவட்டத்திலேயே கடைசி இடத்தில் இருக்கிறோம். வெறும் 66 சதவீதம் வரி மட்டுமே வசூல் ஆகியுள்ளது.பெரும்பாலான பேரூராட்சிகள் 80 சதவீதம் வரி வசூல் செய்துள்ளன. இரண்டாம் அரையாண்டுக்கான வரியை கடந்த அக். 31க்குள் செலுத்த வேண்டும். ஆனால் பிப்ரவரி மாத இறுதியாகியும் 66 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். இதனால் வரி செலுத்தாதோர்க்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்,' என நோட்டீஸ் வழங்கி வருகிறோம்,' என்றனர்.