காட்டுப்பன்றி தாக்கினால் அரசு செலவில் மருத்துவம்; மாநாட்டில் தீர்மானம்
பெ.நா.பாளையம்,;காட்டுப்பன்றி தாக்கி, காயமடையும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசே முழு மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டு, அதற்கான நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டும் என, காட்டுப் பன்றிகள் ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், துடியலூரில் காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு நடந்தது. மாநில தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாநில அமைப்பாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநாட்டில், வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ., தூரம் என்ற பாகுபாடு இல்லாமல், வன எல்லையில் இருந்து விவசாயத்தை அழிக்கின்ற, மனிதர்களை தாக்குகின்ற, காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் விரைவில் சுட்டுக் கொள்ள வேண்டும். வனத்துறையினர் தீர்வு காண தவறினால், விவசாயிகள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து வனத்துக்கு வெளியே வரும் காட்டுப்பன்றிகளை கொல்வது என, முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடுகள் நடத்துவது என்றும், அடுத்த மாநாடு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் மே மாதம் முதல் வாரத்தில் நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில், காட்டுப்பன்றிகள் தாக்கி காயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும். யானை உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகள் பிரச்னைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், மாவட்ட தலைவர் மனோகரன், மாநில துணைத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.