சேதமடைந்த இணைப்பு பாலம்
வால்பாறை; வால்பாறை அருகே, சேதமடைந்த இணைப்பு பாலத்தை சீரமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரை ஒட்டியுள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், 5 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்டன்மோர் எஸ்டேட் மருத்துவமனைக்கு, வால்பாறை நகர் வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதே போல், ஸ்டேன்மோர் எஸ்டேட்டிலிருந்து, நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு செல்லும் தொழிலாளர்களும், 5 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.இந்நிலையில், இரு எஸ்டேட் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆற்றின் குறுக்கே நகராட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன், நல்லகாத்து - ஸ்டேன்மோர் இடையே சிறிய அளவிலான இணைப்பு பாலம் கட்டப்பட்டது. இதனால், இரு எஸ்டேட் தொழிலாளர்களும் பயனடைந்தனர்.இந்நிலையில், இந்த பாலம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. பக்கவாட்டு பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாலத்தை பயன்படுத்த முடியாமல் தொழிலளார்கள் தவிக்கின்றனர்.எனவே, நகராட்சி சார்பில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது இரு எஸ்டேட் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.நகராட்சி கவுன்சிலர் ரவிசந்திரனிடம் கேட்ட போது, ''சேதமடைந்த பாலம் மீண்டும் புதுப்பிக்க மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அனுமதிக்காக சென்னை சென்றுள்ளது. அனுமதி வந்த பின் உடனடியாக பாலம் சீரமைக்கும் பணி துவங்கப்படும்,'' என்றார்.