தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க முடிவு
மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் தேக்கம்பட்டி ஊராட்சி, மக்கள் தொகை அதிகமாகவும், பரப்பளவில் பெரிதாக உள்ளது. மொத்தம், 26 குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியை இரண்டாக பிரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து தமிழக அரசு தேக்கம்பட்டி ஊராட்சியை தேக்கம்பட்டி, ராமேகவுண்டன்புதுார் என இரண்டாகப் பிரிக்க முடிவு செய்து, கருத்துருக்கள் அனுப்புமாறு, மாவட்ட கலெக்டருக்கு, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதில் தேக்கம்பட்டி ஊராட்சியில், 14 குக்கிராமங்கள், புதிதாக உருவாக்கப்பட உள்ள ராமேகவுண்டன்புதூர் ஊராட்சியில், 12 குக்கிராமங்கள் இருக்கும் வகையில், ஊராட்சியை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேக்கம்பட்டி ஊராட்சியில் விவேகானந்தபுரம், தேவனாபுரம், சாலையூர், கெண்டேபாளையம், சீரம்பாளையம், காளியப்பனுார், அரசப்பனுார், மொக்கைநகர், கிட்டாம்பாளையம், பஞ்சுக்காடுபுதுார், குட்டைபுதுார், தொட்டதாசனுார், தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர் ஆகிய 14 குக்கிராமங்கள் இடம்பெற உள்ளன. புதிதாக பிரிக்கப்படவுள்ள ராமேகவுண்டன்புதூர் ஊராட்சியில், குரும்பனூர், அண்ணா நகர், ராமேகவுண்டன்புதார், ராஜீவ்நகர், தாசம்பாளையம், சாமன்னா வாட்டர் நகர், வேல்நகர், அருள்ஜோதி நகர், கூடுதுறைமலை, வெல்ஸ்புரம், சமயபுரம், அம்மன் நகர் ஆகிய 12 குக்கிராமங்கள் இடம் பெற உள்ளன. காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது, 17 ஊராட்சிகள் உள்ளன. தேக்கம்பட்டி ஊராட்சியை இரண்டாகப் பிரித்து, ராமேகவுண்டன்புதுார் ஊராட்சி என புதிதாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம், 18 ஊராட்சிகள் இடம் பெற உள்ளன.