உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம்; இழப்பீட்டுக்கு உத்தரவு

காஸ் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம்; இழப்பீட்டுக்கு உத்தரவு

கோவை;காஸ் சிலிண்டர் விநியோகிக்க தாமதம் செய்ததால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ஜித் என்பவர், பீளமேட்டிலுள்ள காஸ் சர்வீஸ் விநியோகஸ்தர் வாயிலாக, அவரது வீட்டிற்கு சமையல் எரிவாயு இணைப்பு பெற்றார்.2022, ஜூலை, 22ல், காஸ் சிலிண்டர் வழங்க கோரி, 1,082 ரூபாய் செலுத்தி, ஆன்லைனில் முன் பதிவு செய்தார். ஆனால், 30ம் தேதி வரை சிலிண்டர் டெலிவரி செய்யப்படவில்லை.முன்பதிவு நிலை குறித்து ஆன்லைனில் பார்த்த போது, 23ம் தேதியே டெலிவரி கொடுக்கப்பட்டு விட்டதாக பதிவாகி இருந்தது. இது குறித்து, காஸ் விநியோகஸ்தர் அலுவலகத்தில் கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லை.இதையடுத்து சட்ட அறிவிப்பு கொடுத்த பிறகு, காஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வந்தனர். அப்போது, டெலிவரி ஊழியர் தவறு செய்து விட்டதாக கூறி, மன்னிப்பு கடிதம் கொடுத்தனர். இதை ஏற்க மறுத்த மனுதாரர், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரருக்கு உரிய காலத்தில், காஸ் சிலிண்டர் டெலிவரி கொடுக்காதது சேவை குறைபாடாகும். காஸ் ஏஜென்சி நிறுவனம், வரும்காலத்தில், காலதாமதமின்றி சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டும். மனுதாரருக்கு மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ