உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நிலையம் மாற்றுவதில் தாமதம்; மக்கள் தவிப்பு

மின் நிலையம் மாற்றுவதில் தாமதம்; மக்கள் தவிப்பு

அன்னுார்; வடக்கலூர் ஊராட்சியை, பசூர் துணை மின் நிலையத்துடன் சேர்ப்பதில் தாமதம் என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வடக்கலூர் ஊராட்சியில், 8,000 பேர் வசிக்கின்றனர். இங்கு உள்ள மின் நுகர்வோர்களுக்கு, 15 கி.மீ., தொலைவில் உள்ள பெத்திக்குட்டையில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. மிக அதிக தொலைவு என்பதால் வடக்கலூரில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மூன்று கி.மீ., தொலைவில் உள்ள பசூர் துணை மின் நிலையத்துடன் வடக்கலூர் ஊராட்சியை இணைக்க வேண்டும் என 2017ம் ஆண்டு முதல் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், வடக்கலூர் உதவி மின் பொறியாளர் அளித்த பதில் கடிதத்தில், 'வடக்கலூர் மற்றும் மூக்கனுார் பகுதியில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக, பசூர் துணை மின் நிலையத்திலிருந்து புதிய மின் பாதை அமைக்க 2022ம் ஆண்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பப்பட்டது. எனினும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் கடந்த மே மாதம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஏபிசி கேபிள் அமைத்து மின் இணைப்பு வழங்க மதிப்பீடு தயார் செய்து மீண்டும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையில் இருந்து அனுமதி கிடைத்தவுடன் விஸ்தரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு வடக்கலூருக்கு பசூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை