பொள்ளாச்சி: நீர்நிலை பகுதிகளில் இறைச்சிக்காக பறவைகள் வேட்டையாடப்படுவதை கண்டறிந்து தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் கிராமங்களில் உள்ள நீராதாரமிக்க ஏரிகள், குளங்கள் மற்றும் தடுப்பணைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான பறவையினங்கள் காணப்படுகின்றன. இவற்றை இறைச்சிக்காகப் பிடித்து விற்பனை செய்வோர், வலை உள்ளிட்ட சாதனங்களுடன் அவ்வப்போது சுற்றுகின்றனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி, இது போன்று பறவைகளை பிடிப்பது குற்றம் என, வனத்துறையினர் எச்சரித்தாலும், அவர்கள் கண்டுகொள்வது கிடையாது. அவ்வாறு பிடிக்கப்பட்ட பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டாலும், மீண்டும் இத்தகைய அத்துமீறல் தொடர்கிறது. எனவே, பறவைகளை பிடிப்பது குற்றம் என, எச்சரிக்கை பலகை வைக்கவும், பறவை வேட்டையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறவை ஆர்வலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதி நீர்நிலை பகுதிகளில், கொக்கு, மடையான், குயில் உள்ளிட்ட பறவைகள் அதிகம் காணப்படுகிறது. சிலர், இறைச்சிக்காக, பறவைகளை, சுருக்கு, வலை வைத்து பிடிக்க முற்படுகின்றனர். இதனைத்தடுக்க, நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் பறவைகள் பிடிப்பதை தடுக்க, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் தொடர்பு எண் வெளியிடப்பட வேண்டும்,' என்றனர்.