பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பிரதான குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி வால்பாறை ரோட்டில், 295 கிராமங்களுக்கான குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. இந்நிலையில், வஞ்சியாபுரம் பிரிவு அருகே, குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, தண்ணீர் வீணாகிறது. ஒரு வார காலமாக தண்ணீர் வெளியேறிய நிலையில், குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.அங்கு, மழைநீர் வடிகால் அமைக்காமல் இருப்பதால், ரோட்டில் தண்ணீர் தேக்கமடைகிறது. அடிக்கடி ஒரே இடத்தில், குழாய் உடைப்பு ஏற்பட்டும், அதனை முறையாக சீரமைக்க அதிகாரிகள், அக்கறை காட்டுவதில்லை என புகார் எழுகிறது.மக்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.குடிநீர் பற்றாக்குறை உள்ள சூழலில், அதிகாரிகளின் அலட்சியத்தால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகிறது. இனி வரும் நாட்களில், அணைகளின் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்துவிடும்.பல கிராமங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல், காலி குடங்களுடன் அலைமோதுவர். இதேபோல, வஞ்சியாபுரம் வழியாக, குடிமங்கலம் நோக்கி அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடுகிறது.மேலும், சூளேஸ்வரன்பட்டி அருகேயும், குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக, தண்ணீர் வழிந்தோடியது. நேற்று, அவசரகதியில், சரி செய்யப்பட்டது. குழாய்களில், சிறு உடைப்பு ஏற்பட்டவுடன், கண்காணித்து சீரமைத்திருந்தால், தண்ணீர் விரயம் தவிர்க்கப்பட்டிருக்கும். கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி தண்ணீர் விரயமாவதை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.