உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிங்கவால் குரங்குகளுக்கு உணவு கொடுக்காதீங்க! சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

 சிங்கவால் குரங்குகளுக்கு உணவு கொடுக்காதீங்க! சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

வால்பாறை: வால்பாறை செல்லும் ரோட்டில் காணப்படும் சிங்கவால் குரங்குகளுக்கு சுற்றுலா பயணியர் உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. அரிய வகை வன விலங்குகளில் ஒன்றான சிங்கவால் குரங்குகள், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம், பழைய வால்பாறை, குரங்குமுடி, சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. மிகவும் கூச்ச சுபாவமுடைய இந்த குரங்குகள் வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கொட்டைகளை மட்டுமே உணவாக உட்கொள்கின்றன. சமீப காலமாக, வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியர் வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி, சிங்கவால் குரங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்குகின்றனர். இயற்கைக்கு மாறான உணவு உட்கொள்வதினாலும், பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுகளை வழங்குவதாலும், அவை உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை நகரில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள புதுத்தோட்டம் ரோட்டில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இவை ரோட்டில் வாகனங்களில் சிக்கி அடிபடாமல் இருக்க, ஆறு இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளன. வால்பாறைக்கு வரும், சுற்றுலா பயணியர் மலைப்பாதையில் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். பிளாஸ்டிக் கவரில் உணவுபொருட்களை திறந்தவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும். சிங்கவால் குரங்குகள் நடமாடும் பகுதியில் அவற்றுக்கு உணவு கொடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி