இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்; கோவை தொழில் அமைப்பினர் வரவேற்பு
கோவை; இந்தியா- - இங்கிலாந்து இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு, கோவை தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை, மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இங்கிலாந்து உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு, 2021, ஜன., 13 முதல் நடந்து வருகிறது. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர், போரிஸ் ஜான்சன் காலத்தில் இப்பேச்சுவார்த்தை வேகம் பெற்றது.பின்னர் இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்களால் சற்று தொய்வடைந்தது. இந்நிலையில், புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றதும், கடந்த பிப்., முதல் மீண்டும் பேச்சுவார்த்தை வேகமெடுத்தது. கடந்த ஏப்.,ல், மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.இதனிடையே, இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது, 'வரலாற்றில், மிக முக்கியமானதொரு மைல்கல்' எனவும் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், கோவை தொழில் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.இந்திய தொழில் வர்த்தக சபை - கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் கூறுகையில், ''வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தை, தொழில் வர்த்தகசபை வரவேற்கிறது. இருதரப்பு பொருளாதார உறவையும் வலுப்படுத்தும், பெரும் மாற்றமாக இருக்கும். வர்த்தகம், முதலீடு மற்றும் பல்வேறு துறைகளில், கூட்டு முயற்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, தமிழக தொழில் துறை மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு நல்வாய்ப்பாக இருக்கும். இந்த ஒப்பந்தம், போட்டித்தன்மையை அதிகரித்து, உலகளவில் கோவைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம். இம்முயற்சியை சாத்தியப்படுத்திய இரு அரசுகளுக்கும் பாராட்டுக்கள்,'' என்றார்.'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடான இங்கிலாந்துடனான இந்த ஒப்பந்தம் நமது ஏற்றுமதி அதிகரிக்க பெரிய அளவில் உதவும். இங்கிலாந்து வழியாக, ஐரோப்பிய சந்தைக்குள் நாம் நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, ஜவுளித் துறைக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்,” என்றார்.இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை, சாத்தியப்படுத்திய பிரதமர் மோடிக்கு, தொழில் அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
'தமிழக ஜவுளித்துறைக்கு வாய்ப்பு'
ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறுகையில், “இங்கிலாந்து ஆண்டுக்கு 19 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி இறக்குமதி செய்கிறது. இதில், 21 சதவீதம் சீனாவும், 18 சதவீதம் வங்கதேசமும், நமது பங்களிப்பு 5 சதவீதமாகவும் இருக்கிறது. 12 சதவீத வரி விதிப்பு இருந்தபோதும், நாம் 5 சதவீத சந்தையை தக்க வைத்திருந்தோம். இப்போது வரி இல்லை என்ற நிலையால், நமது ஏற்றுமதி இரண்டு மடங்காக உயரும். தற்போது ரூ.8,000 கோடியாக உள்ள, இங்கிலாந்துக்கான இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதி ரூ.16 ஆயிரம் கோடியாக உயரும். இந்திய ஜவுளித்துறைக்கு குறிப்பாக, தமிழக ஜவுளித்துறைக்கு மிக நல்ல வாய்ப்பு,” என்றார்.