கல்வி செய்திகள்
ஸ்ரீ சக்தியின் 'இல்யூஷன்' நடனக்குழுவுக்கு முதலிடம்
எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 'இல்யூஷன்' நடன குழுவினர், என்.ஐ.டி., திருச்சியில் நடந்த 'பெஸ்டெம்பர்' நிகழ்வில் முதலிடத்தை பிடித்து, வென்றனர்.சிறந்த நடன அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில், கடுமையான தேர்வு செயல்முறைக்குப் பிறகு, முதல் ஏழு அணிகள் மற்றும் வைல்டு கார்டு பங்கேற்புகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதி போட்டியில், சக்தி பொறியியல் கல்லுாரி 'இல்யூஷன்' குழுவினரின் அசத்தல் நடனம், பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்தது. முதல் இடத்தில் வெற்றி பெற்று, ரூ.40,000 ரொக்கப் பரிசை தட்டிச்சென்றது. மகளிர் கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்
* கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில் நடந்த, அண்ணா பல்கலையின் பத்தாவது மண்டலங்களுக்கு இடையேயான மகளிருக்கான கூடைப்பந்து போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் முதல் பரிசை பெற்றனர்.அரையிறுதி போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி 40 -18 புள்ளி கணக்கில், கோயம்புத்துார் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு அரையிறுதி போட்டியில், இந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ராமகிருஷ்ணா கல்லுாரியை அணியை 36 - 10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில், ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி மாணவிகள் 77 - 70 என்ற புள்ளிக் கணக்கில், வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, கல்லுாரியின் தலைவர் மோகன் ராம், இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். எண்ணம் கல்லுாரி துணை முதல்வர் சிறந்த மருந்தியல் ஆராய்ச்சியாளர்
* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், மருத்துவ ஆராய்ச்சி தின விழா, பல்கலை வளாகத்தில் நடந்தது.இதில், தமிழ்நாடு முழுவதுள்ள மருத்துவம், மருந்தியல், நர்சிங், பிசியோதெரபி மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லுாரி மாணவி மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு துறைகளை சேர்ந்த சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், கோவை, சொலவாம்பாளையத்தில் செயல்படும் எண்ணம் பார்மசி கல்லுாரியின் துணை முதல்வர் திலகவதி, சிறந்த மருந்தியல் ஆராய்ச்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருதை, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.விருது பெற்ற துணை முதல்வர் திலகவதியை, எண்ணம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மனோகரன், பேராசிரியர்கள், துணை வேந்தர் நாராயணசாமி, ஆராய்ச்சிக் கழக இயக்குனர்கள் பாராட்டினர்.