சிறு தானிய கடைக்கு மின் இணைப்பு கட்
கோவை; கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், சிறுதானிய உணவகத்தை கோபுரம் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தினர். கடையை காலி செய்யுமாறு, இரு நாட்களுக்கு முன் மகளிர் திட்ட பணியாளர்கள் நோட்டீஸ் வழங்கினர். காலி செய்யாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உணவக பணியாளர்கள் கூறுகையில், 'எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல், 2024 ஜூலையில் கடை வழங்கப்பட்டது. அப்போது வாடகை கேட்கவில்லை. தற்போது திடீரென, 6,000 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும், தண்ணீர், மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர்.காலி செய்ய அவகாசம், வாடகையை குறைக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அதற்குள் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். உணவு தயாரிக்க முடியவில்லை' என்றனர். மகளிர் திட்ட அலுவலர் மதுரா கூறுகையில், ''இதுவரை கால அவகாசம் இல்லாமல், அனுமதிக்கப்பட்ட சிறுதானியக்கடை, மாவட்டக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, 11 மாத அவகாசத்தில் மட்டும் சுழற்சி முறையில், வெவ்வேறு சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும். ''மாத வாடகை மற்றும் குடிநீர் மற்றும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது செயல்பட்டு வரும் கடைக்கு, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் இடம் ஒதுக்கப்படும்,'' என்றார்.