உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எலையமுத்துார் - கல்லாபுரம் ரோட்டை விரிவுபடுத்துங்க! பாலங்களும் வலுவிழப்பதால் அச்சம்

எலையமுத்துார் - கல்லாபுரம் ரோட்டை விரிவுபடுத்துங்க! பாலங்களும் வலுவிழப்பதால் அச்சம்

உடுமலை: எலையமுத்துார் - கல்லாபுரம் ரோட்டை விரிவுபடுத்தி, பராமரிப்பில்லாத பாலங்களை மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில் இருந்து எலையமுத்துார் வழியாக, கல்லாபுரம் செல்லும் ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில், 10க்கும் அதிகமான கிராமங்களும், தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன.வழித்தடத்தில், கல்லாபுரம் வரை, அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், எலையமுத்துாரில் இருந்து கல்லாபுரம் வரை, ரோடு மிக குறுகலாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாது; பல இடங்களில், சிறிய ஓடைகள் குறுக்கிடும் பள்ளங்களும் உள்ளன.விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில் இருந்து, விளைபொருட்களை சந்தைப்படுத்த, டிராக்டர் மற்றும் இதர வாகனங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். குறுகலான ரோட்டில், இத்தகைய வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது.எனவே, ரோட்டை இருவழித்தடமாக விரிவுபடுத்த வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த ரோட்டில், எலையமுத்துார் அருகே, மழை நீர் ஓடைகளின் குறுக்கே இரு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாமல், இந்த பாலங்கள் வலுவிழந்து வருகின்றன.தடுப்பு சுவர்களும் விரிசல் விட்டு, கீழே விழும் நிலையில் உள்ளது. விபத்துகள் ஏற்படும் முன், இப்பாலங்களை மேம்படுத்த வேண்டும்.

குறுகலான பாலங்கள்

மேலும், செல்வபுரம் அருகே, அமராவதி பிரதான கால்வாயின் குறுக்கே, முன்பிருந்த ரோட்டின் அகலத்துக்கேற்ப பாலம் கட்டப்பட்டது. குறுகலாக உள்ள அப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை.எனவே, பாலத்தை விரிவுபடுத்தவும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ