காலாவதி மருந்து கொட்டிய விவகாரம்; வழக்கு பதியாமல் ஆட்டோ விடுவிப்பு
அன்னுார்; காலாவதி மருந்துகளை கொட்டிய விவகாரத்தில் வழக்கு பதியாமல் சரக்கு ஆட்டோ விடுவிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.கோவில்பாளையம் அருகே கோட்டைபாளையத்தில், மயான பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு சரக்கு ஆட்டோவில் வந்த இருவர் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொட்டினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் சரக்கு ஆட்டோவை சிறை பிடித்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.அதிகாரிகள் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக காலாவதியான மருந்து மாத்திரைகளை கொட்டியதற்காக சரக்கு ஆட்டோ உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒன்றிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து நேற்று மதியம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டது. அபராதம் செலுத்திய ரசீது கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை விடுவித்தனர்.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'மிகவும் அபாயகரமான மருந்து மாத்திரைகளை அலட்சியமாக திறந்த வெளியில் கொட்டியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்.ஊரக வளர்ச்சி துறை சார்பில் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது,' என்றனர்.