60 வயதில் வரும் கண் பிரச்னைகள் இன்று 40 வயதிலேயே வருகின்றன: தினமலர் கருத்தரங்கில் டாக்டர் தகவல்
கோவை : 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், ஏராளமான பெற்றோர், குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், 'காக்க...காக்க கண், மனநலம் காக்க' எனும், விழிப்புணர்வு கருத்தரங்கு, கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர்., ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.கருத்தரங்கில், எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை அறங்காவலர் சுந்தர் பேசுகையில், '' தற்போது அதிகளவில் டிஜிட்டல் தளங்கள் உள்ளன. அவற்றில் கூறப்படும் தகவல்களை, தவறாக புரிந்து கொண்டு தாங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். அதை தடுப்பதாக இந்நிகழ்ச்சி இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.கருத்தரங்கில், 'மொ பைல் போன் பாதிப்பிலிருந்து கண்களை காப்பது எப்படி' என்பது குறித்து, கோவை டிரினிட்டி மருத்துவமனை கண் டாக்டர் அனுஷா ராஜ் குமார் பேசியதாவது:தொடர்ந்து மொபைல்போன், கம்ப்யூட்டர் பார்ப்பதால், பார்வை பாதிப்பு ஏற்படுகிறது. கண்ணின் கருவிழி, கேமரா லென்ஸ் போன்று செயல்படுகிறது. கண் பரிசோதனையின் வாயிலாக மூளையில் உள்ள பிரச்னையை கண்டறியலாம். கண்ணுக்கு, 'புளூ லைட்' தேவைதான். ஆனால், அதிகளவில் செல்லும் போது பிரச்னை ஏற்படுகிறது. இரவில், மொபைல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன், மொபைல்போன், கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். துாங்குவதற்கு, 'மெலட் டோனின்' எனும் ஹார்மோன் மிகவும் அவசியம். அந்த ஹார்மோன் இல்லை எனில் துாக்கமின்மை, பசியின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மொபைல்போனில் இருந்து வரும் புளூ லைட்டால், மெலட்டோனின் சுரப்பது தடைபடும். துாங்கினாலும் ஆழ்ந்த துாக்கம் இருந்திருக்காது. இதனால், கற்றல், ஒரு விஷயத்தில் ஈடுபாடு, ஒருமுகத்தன்மை இருக்காது. சமீபகாலமாக பரிசோதனைக்கு வரும், ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை இருக்கிறது. 60 வயதில் வரும் பல கண் பிரச்னைகள் தற்போது, 40 வயதிலேயே வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
விளையாட விடுங்க'
''கிட்டப்பார்வை உள்ளவர்களை, 90 நிமிடங்கள் சூரிய ஒளியில், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருக்கச் செய்யும் போது, அவர்களுக்கு அக்குறைபாடு சரியாவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ''தினமும் காலை அரை மணி நேரம், குழந்தைகளை வெயிலில் விளையாட விட வேண்டும். கண் பயிற்சி, கண் சிமிட்டுதல், சரியான துாரத்தில் வைத்து படித்தல், கண் பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் கண் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்,'' என்றார் டாக்டர் அனுஷா ராஜ்குமார்.