மீண்டும் வட்டியில்லாத கடன் கேட்கிறது விவசாயிகள் சங்கம்
கோவை; விவசாயிக்கு அதிகபட்சமாக, ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் கொடுக்கும் நிலையை, எவ்வித நிபந்தனைக்கும் உட்படுத்தப்படாமல், மீண்டும் தொடர வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கூட்டுறவுத் துறை முதன்மை செயலரிடம் அளித்த மனு:கோவை மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள், முதல்வர் ஆணையால் வழங்கப்பட்டு வந்த பயிர்க் கடன் தொகை, 1.60 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கியதால், விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.தற்போது கூட்டுறவு சங்க ஆணையர் சுற்றறிக்கையில், 'சிபில் ஸ்கோர் பார்த்து, கூட்டுறவு வங்கியில் கடன் பெற வேண்டும்' என்ற நிபந்தனை கூறப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தினமும் கூட்டுறவு வங்கிகளுக்கும், நிலவள வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் அலைய வேண்டிய சூழல் இருக்கிறது.அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு, வழங்கப்படும் தொகை இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிட்டால், வாழை மற்றும் மஞ்சள் பயிர் செய்த விவசாயிகளுக்கு, இரண்டு ஏக்கருக்கு மட்டுமே உற்பத்தி செலவுக்கு போதும். மீதி தொகையை பெற மற்ற வங்கிகளை நாட வேண்டிய சூழல் இருக்கிறது.பொருளீட்டு கடனாக நகை வைத்து, பயிர்க்கடன் பெறும் போதும், வட்டியில்லா கடன் பெற்றிருந்தால், பயிர்க்கடன் வழங்க இயலாது என, கூட்டுறவு சங்க செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறான அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை, வட்டியில்லா கடன் கொடுக்கும் நிலையை, எவ்வித நிபந்தனைக்கும் உட்படுத்தப்படாமல் மீண்டும் தொடரச் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ஆடு, மாடு பராமரிப்பு
அன்னுார் விவசாயிகள் சிலர் கூறியதாவது :அன்னுார் வட்டாரத்தில் கடந்த ஒன்றரை மாதமாக, பல ஆயிரம் விவசாயிகள் கடன் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதிக வட்டிக்கு தனியார் நிறுவனங்களில் கடன் பெற்று வருகின்றனர்.கால்நடை பராமரிப்புக்காக ஒரு பசுவுக்கு 18,000 ரூபாய் கடன் வழங்கி வந்தனர். கடந்த மாதம் முதல், பால் கொள்முதல் செய்யும் நிறுவனம் ஜாமின் அளித்தால் மட்டுமே, கடன் வழங்க முடியும் என்று கூறி விட்டனர். இதனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை பராமரிப்புக்கும் கடன் பெற முடியவில்லை. பயிர் கடனும் பெற முடியாமல், கால்நடை பராமரிப்பு கடனும் பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.