நொய்யல் ஆற்றை மீட்க நிதி; விவசாயிகள் வலியுறுத்தல்
கோவை; கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மாசடைந்திருக்கும் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு, கோவை வந்திருந்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியிடம், தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முறையிட்டனர். கோவை மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து கரூர் வரை, 160 கி.மீ., பயணிக்கும் நொய்யல் ஆறு காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் குடியிருப்புகளில் வெளியேற்றும் கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதால், விவசாய நிலங்களில் மண்ணின் தன்மை கெட்டு விட்டது. சமீபத்தில் கோவை வந்த தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து, 'போர்க்கால அடிப்படையில் நொய்யலை மீட்க வேண்டும்; அதற்குரிய நிதியை ஒதுக்க முதல்வரிடம் வலியுறுத்துங்கள்' என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். அச்சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞான சம்பந்தன் கூறியதாவது: நொய்யலில் வரும் மாசுபட்ட நீரால், விவசாயிகள், கால்நடைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் நொய்யல் படுகையில் அதிகளவு இருப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. மற்ற மாவவட்டங்களை விட கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு போர்க்கால முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எந்தெந்த பகுதியில் ஆற்றில் கழிவு கலக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். மாநகராட்சிக்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறினார்கள்; நிதி ஒதுக்கவில்லை. கோவை மாநகராட்சி பகுதியில் இருந்து வரும் தண்ணீர் விஷத்தன்மையோடு இருக்கிறது. 32 குளங்கள் வீணாகி விட்டன. பெரும்பாலான குளங்களில் மீன் பிடித்தொழில் நடக்கிறது. குளத்துக்கு மழை நீர் தருவிக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்து, நொய்யல் ஆற்றை மீட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நொய்யலை மீட்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி, முதல்வரிடம் தெரிவிக்கச் சொல்லி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் அமைச்சர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.