உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விமான நிலைய விரிவாக்க பணி சர்வீஸ் ரோடு கேட்கும் விவசாயிகள்

 விமான நிலைய விரிவாக்க பணி சர்வீஸ் ரோடு கேட்கும் விவசாயிகள்

சூலுார்: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களிடம் மீதமுள்ள நிலத்துக்கு செல்ல சர்வீஸ் ரோடு வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை விமான நிலையம் தற்போது, 420 ஏக்கரில் உள்ளது. விரிவாக்க பணிக்காக, மேலும், 627 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 99 ஆண்டுகள் குத்தகைக்கு இந்த நிலங்கள், இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, தமிழக அரசு வழங்கியுள்ளது. கையகப்படுத்திய நிலங்களை சுற்றி, சுற்று சுவர் கட்டும் பணி நடக்கிறது. சுற்று சுவர் கட்டுவதால், தங்களிடம் எஞ்சியிருக்கும் நிலத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விரிவாக்க பணிக்கு நிலத்தை வழங்கிய விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சின்னியம்பாளையம் விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, கோவையில் கலெக்டராக இருந்த உமாநாத், நில உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடும், விமான நிலையத்துக்கு செல்ல, புதிதாக அமைக்கப்படும், 60 மீட்டர் ரோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, உறுதி அளித்திருந்தார். அதனால், எஞ்சியுள்ள எங்கள் நிலத்துக்கு செல்ல எந்த தடையும் இருக்காது என, நம்பினோம். தொடர்ந்து, அரசு மற்றும் கோவை கலெக்டரை பலமுறை சந்தித்து, 60 மீ., ரோட்டில், இருபுறமும், தலா, 10 மீ., சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில், விமான நிலைய ஆணையம், சர்வீஸ் ரோட்டுக்கு இடம் விடாமல், சுற்றுச்சுவர் கட்ட, 10 அடி ஆழத்துக்கு குழி எடுத்தனர். அதை தடுத்து நிறுத்தி உள்ளோம். அரசிடமும், கலெக்டரிடமும் அனுமதி பெற்ற வரைபடத்தையும், திட்டத்தையும் மாற்றி, புதிய திட்டத்தை, ஆணையம் செயல்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. புது திட்டப்படி சுற்றுச்சுவர் கட்டினால், எஞ்சியுள்ள எங்கள் நிலத்துக்கு செல்ல வழியே இல்லை. அதனால், தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, 60 மீ., ரோட்டில் இருபுறமும், தலா, 10 மீ., சர்வீஸ் ரோடு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை