| ADDED : ஜன 16, 2024 11:45 PM
கோவை:கோவையின் பல்வேறு பகுதிகளிலும், மாட்டுப் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று, உழவுக்கு உதவிகரமாக இருக்கும் மாடுகளுக்கு, நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.விவசாயிகளின் நண்பனாகவும், உழவுக்கு உயிருட்டும் தோழனாகவும் இருந்து உழைக்கும் கால்நடைகளை போற்றி, நன்றி செலுத்தும் வகையில், விருந்து படைத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.கோவை மாவட்டத்தில் விவசாயம் அதிகளவில் நடப்பதால், மாட்டுப்பொங்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் நேற்று, மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.அதிகாலையிலேயே மாட்டு தொழுவத்தை சுத்தப்படுத்தி, மாடுகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு, வர்ணம் பூசி, அழகுபடுத்தினர். கழுத்துக்கு தோலினால் ஆன வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டும் இடப்பட்டது.பழைய மூக்கணாங் கயிறுகள் மாற்றப்பட்டு, புதிய கயிறுகள் கட்டப்பட்டன. அத்துடன் தாம்புக் கயிறும் அணிவிக்கப்பட்டது.வழிபாடு நடத்தி பொங்கல், கரும்பு, வாழைப்பழம் படைத்து, அவற்றை மாடுகளுக்கு ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.