நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திடம் மீன் மார்க்கெட் இடம் ஒப்படைப்பு
கோவை, உக்கடம் - செல்வபுரம் பைபாஸில் பழைய மீன் மார்க்கெட் வளாகம் இடிக்கப்பட்ட இடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.உக்கடம் சி.எம்.சி., காலனி மற்றும் வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனியில் வசித்த துாய்மை பணியாளர்களுக்கு, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில், புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருவதாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உறுதியளித்தது.உக்கடத்தில் தனித்தனி ஓட்டு வீடுகளிலும், வெரைட்டி ஹால் ரோட்டில் வீட்டு வசதி வாரியம் கட்டிக் கொடுத்த அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அவர்கள் அதுநாள் வரை வசித்து வந்தனர்.உக்கடத்தில், 520 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், 222 வீடுகளே கட்டப்பட்டு இருக்கின்றன. இன்னும், 298 வீடுகள் கட்ட வேண்டும். செல்வபுரம் பைபாஸில் இருந்த, பழைய மீன் மார்க்கெட்டை இடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீன் வியாபாரிகளை வெளியேற்றி, அவ்விடத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது.
குலுக்கலில் வீடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கூறுகையில், 'உக்கடம் மற்றும் வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனிகளில் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்' என்றனர்.
வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனியில் ஐந்து பிளாக்குகளில், 432 வீடுகள் கட்ட வேண்டும். 192 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இன்னும், 240 வீடுகள் கட்ட வேண்டும். இவ்விரு இடங்களிலும் வசித்த துாய்மை பணியாளர்கள், தகர கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். கோடை காலமாக இருப்பதால், வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது கட்டியுள்ள வீடுகளை, பயனாளிகளுக்கு விரைந்து ஒதுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.