சிறுமுகையில் வெளிநாட்டு கலாசார குழுவினர் ஆய்வு
மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே, வெளி நாடுகளை சேர்ந்த, கலாசார பாரம்பரிய தொழில் ஆராய்ச்சி குழுவினர், கைத்தறி நெசவை பார்வையிட்டு, பட்டு சேலை உற்பத்தி முறையை தெரிந்து கொண்டனர். சிறுமுகை, ஆலங்கொம்பு ஆகிய பகுதிகளில் கைத்தறி பட்டு சேலைகள் உற்பத்தி செய்யும் கைத்தறிகள் அதிகளவில் உள்ளன. இந்த கைத்தறி நெசவு முறையை தெரிந்து கொள்வதற்காக, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, கலாசார பாரம்பரிய தொழில் ஆராய்ச்சி குழுவினர், சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பிற்கு வந்தனர். அங்கு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும், பாரம்பரிய கைத்தறி நெசவு தொழில் பற்றிய விபரங்களையும், உற்பத்தி முறைகளையும் கேட்டறிந்தனர். மேலும் கைத்தறி பட்டு சேலை எவ்வாறு நெசவு செய்யப்படுகிறது, என்பதை நெசவாளர்களிடம் கேட்டறிந்து, நெசவு செய்வதையும் நேரில் பார்த்தனர். உற்பத்தி செய்த பட்டு சேலைகளை, நினைவுப்பொருளாக தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வாங்கிக் கொண்டனர். மேலும் பட்டு சேலை உற்பத்தி, கைத்தறி எவ்வாறு இயங்குகிறது என்பதை பற்றி விவரங்களை கேட்டறிந்தும், வீடியோ வாயிலாக படம் பிடித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்வா கலாசார அமைப்பு சேர்ந்த ஸ்ரீமதி சந்திரா, ஹரி, சாமிநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.