இலவச பட்டாசு கேட்டு கடைக்காரரை கத்தியால் குத்திய நால்வர் கைது
கோவை: கோவை, சிங்காநல்லுார், தேவேந்திர தெருவை சேர்ந்தவர் முத்துராஜ், 44. பைனான்ஸ் தொழில் மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார். தீபாளியை முன்னிட்டு நீலிக்கோனாம்பாளையம் பகுதியில் தற்காலிக பட்டாசு கடை அமைத்திருந்தார்.முத்துராஜூக்கு உதவியாக உறவினர் திவாகர் என்பவரும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தீபாவளி அன்று, பட்டாசு கடைக்கு வந்த ஐந்து பேர் கும்பல் இலவசமாக பட்டாசு கேட்டு தகராறு செய்தனர்.அந்த கும்பலை சேர்ந்த சரவணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துராஜின் வயிறு, கை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார். இதைபார்த்த திவாகர் தடுக்க முயன்ற போது அவருக்கு கத்தி குத்து விழுந்தது. காயமடைந்த முத்துராஜ் மற்றும் திவாகர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிங்காநல்லுாரை சேர்ந்த சரவணன், 24, காரமடையை சேர்ந்த ரஜேஷ்குமார், 23, வரதராஜபுரத்தை சேர்ந்த சுஜித், 24, சரண்,26 ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண்குமாரை தேடி வருகின்றனர்.